சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம்: சேலம் சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கு 'சீல்'
சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம் தொடர்பாக சேலம் சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.;
சேலம்,
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டையை ஈரோடு, சேலம், ஓசூர் பகுதிகளில் உள்ள செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், சிறுமியிடம் கருமுட்டை எடுத்த புகாரில் சேலம், ஓசூர் உள்பட 6 ஆஸ்பத்திரிகள் சட்டப்பிரிவுகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. இதனால் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், சிறுமியிடம் கருமுட்டை எடுத்த புகாரின் அடிப்படையில் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சுதா ஆஸ்பத்திரியில் உள்ள ஸ்கேன் மையத்திற்கு நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று சீல் வைத்தனர். முறைகேடாக சட்டத்திற்கு புறம்பாக மருத்துவ சிகிச்சை வழங்கும் ஆஸ்பத்திரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.