பாசிப்பட்டினம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா

பாசிப்பட்டினம் தர்காவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.

Update: 2023-08-03 18:45 GMT

தொண்டி, 

பாசிப்பட்டினம் தர்காவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.

சந்தனக்கூடு திருவிழா

திருவாடானை தாலுகா பாசிப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற மகான் சர்தார் நெய்னா முகமது சாகிபு ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நேற்று நடைபெற்றது.

இதனையொட்டி மானவநகரி, ஸ்தானிகன் வயல் கிராமத்தில் இருந்து வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு வாண வேடிக்கை, மேளதாளங்களுடன் பாசிப்பட்டினம் சந்தனக்கூடு மைதானத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து தர்கா கமிட்டியினர் நாட்டிய குதிரை, மேளதாளங்கள் முழங்க சந்தனக்கூடு மைதானத்திற்கு சென்று தயார் நிலையில் நின்றிருந்த சந்தனக்கூட்டை தர்காவிற்கு அழைத்து வந்தனர். பின்னர் தர்காவில் மகான் அடக்க ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்த சந்தனக்குடம் சந்தன கூட்டில் வைக்கப்பட்டது.

சிறப்பு தொழுகை

தர்காவை சந்தனக்கூடு 3 முறை வலம் வந்தது. பின்னர் மகான் அடக்க ஸ்தலத்தில் சந்தனக்கூடு வைக்கப்பட்டு உலக நன்மைக்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் சிறப்பு தொழுகை மற்றும் பாத்தியா ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகான் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு சந்தனம், மல்லிகைப்பூ, சீனி, பேரிச்சம்பழம் போன்றவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் திருவாடானை எம்.எல்.ஏ. கருமாணிக்கம், யூனியன் தலைவர் முகமது முக்தார், வட்டார காங்கிரஸ் தலைவர் கோடனூர் கணேசன், ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஒடவயல் ராஜாராம், மாவட்ட கவுன்சிலர் காளியம்மாள் முத்து மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் சிவ சங்கீதா ராஜாராம், தாசில்தார் கார்த்திகேயன், போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ், விழா கமிட்டி அமீர்கான், சேகனாதுரை, முஸ்தபா கமால், அஷ்ரப் அலி, கலியநகரி ஊராட்சி தலைவர் உம்மு சலீமா நூருல் அமீன், மற்றும் வருவாய்துறை, போலீசார், மகான் வாரிசுதாரர்கள், தர்கா கமிட்டியினர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வருகிற 10-ந் தேதி இரவு தலைக்கிழமை மற்றும் நிகழ்ச்சிகளும், 18-ந் தேதி கொடி மற்றும் கொடிமரம் இறக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்