இன்னுயிர் காப்போம்-நம்மை காப்போம் 48 திட்டம்: ஒரு லட்சமாவது நபரிடம் அமைச்சர் நலம் விசாரிப்பு
இன்னுயிர் காப்போம்-நம்மை காப்போம் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் ஒரு லட்சமாவது நபரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.;
காஞ்சீபுரம் மாவட்டம் தண்டலத்தில் சவீதா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் ஒரு லட்சமாவது நபரை மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சந்தித்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து நலம் விசாரித்தார்.
இதையடுத்து மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டம் விபத்து நடந்து 48 மணி நேரத்தில் அவசர சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவி திட்டமாகும். இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந்தேதி மேல்மருவத்தூர் மருத்துவக்கல்லூரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. சாலை விபத்தால் நிகழும் இழப்புக்களை குறைப்பதற்கும், அதனால் நிகழும் குடும்பங்களின் மருத்துவ செலவை குறைப்பதற்கும் முதல்-அமைச்சரின் புதிய உயிர்காக்கும் திட்டம் தான் இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டமாகும்.
இந்த திட்டம் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபத்து நடந்த முதல் 48 மணி நேர நெருக்கடியான காலக்கட்டத்தில் முழுமையான சிகிச்சை வழங்க தேவையான நிதியை வழங்குவதை உறுதி செய்வதாகும்.
விபத்தில் பாதிக்கப்படும் நபருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சைக்காக வழங்கப்படுகிறது.
விபத்தில் பாதிக்கப்படும் கிராமப்புறத்தினர், நகர்ப்புறத்தினர், வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
அதிக விபத்து நடைபெறும் 500 நெடுஞ்சாலை இடங்களை கண்டறிந்து, அதற்கு அருகாமையில் தகுதிவாய்ந்த தனியார் ஆஸ்பத்திரிகள் 445 மற்றும் அரசு ஆஸ்பத்திரிகள் 228 என மொத்தம் 673 ஆஸ்பத்திரிகள் கண்டறியப்பட்டு, உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்படுகின்றனர். இதுவரை இந்த திட்டத்தின்கீழ் 18.12.2021 முதல் 2.8.2022 (நேற்று முன்தினம்) வரை ரூ.90.19 கோடி செலவில் ஒரு லட்சத்து 61 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச்செயலாளர் ப.செந்தில் குமார், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர் டாக்டர் உமா, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, சவீதா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வேந்தர் என்.எம்.வீரைய்யன், துணை வேந்தர் டாக்டர் சிவாஜிசடாரம், இயக்குனர் டாக்டர் தீபக், முதல்வர் டாக்டர் ஜெ.தாமோதரன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.