கடலூர் மத்திய சிறையில் சவுக்கு சங்கரின் உண்ணாவிரதம் வாபஸ்

கடலூர் மத்திய சிறையில் கடந்த 4 நாட்களாக சவுக்கு சங்கர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

Update: 2022-10-03 15:41 GMT

கடலூர் ,

சமூக வலைதளத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது அவமதிப்பு வழக்கை மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தது.

இந்த நடவடிக்கைக்கு பின்னரும், யூடியூப் சேனலில் இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, கிரிமினல் அவமதிப்பு வழக்கும் மதுரை ஐகோர்ட்டு பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அதில் நீதித்துறையை அவதூறாக விமர்சித்த வழக்கில் அவமதிப்பு நடவடிக்கையாக சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்டார்.

பின்னர் நிர்வாக காரணங்கள் மற்றும் அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர், மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 16-ந்தேதி முதல் சவுக்கு சங்கர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு கடலூர் மத்திய சிறை நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். 3-வது நாளான நேற்று உண்ணாவிரதம் இருந்து வரும் சவுக்கு சங்கருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறைசாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடலூர் மத்திய சிறையில் கடந்த 4 நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை சவுக்கு சங்கர் வாபஸ் பெற்றுள்ளார். பார்வையாளர்களை சந்திக்க அனுமதி மறுப்பை ரத்து செய்யக்கோரி எழுத்துப்பூர்வமான கடித்தத்தை சங்கரிடமிருந்து பெற்றுக்கொண்ட கடலூர் சிறை நிர்வாகம், கோரிக்கையை பரிசீலனை செய்வதாக உறுதியளித்ததன் பேரில் அவர் போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்