குழந்தை கடத்தலை தடுக்க பார்க்கோடு வசதியுடன் ஸ்கேனர் கருவி

குழந்தை கடத்தலை தடுக்க பார்க்கோடு வசதியுடன் ஸ்கேனர் கருவி

Update: 2022-12-11 19:56 GMT

தனியார் ஆஸ்பத்திரியை மிஞ்சும் அளவுக்கு தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தலை தடுக்க பார்க்கோடு வசதியுடன் ஸ்கேனர் கருவி வைக்கப்பட்டு, பிரசவித்த பெண்கள், அவருக்கு உதவும் உதவியாளருக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி

தஞ்சை மாநகரின் மையப்பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி. இந்த ஆஸ்பத்திரியில் தற்போது மகப்பேறு, குழந்தைகள் நலப்பகுதி, கண் சிகிச்சை பகுதி ஆகியவைசெயல்பட்டு வருகின்றன. இதுதவிர புறநோயாளிகள் பிரிவும் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்திலேயே அதிகஅளவில் பிரசவம் நடைபெறும் ஆஸ்பத்திரிகளுள் இந்த ஆஸ்பத்திரியும் ஒன்றாகும். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர்.

உதவி செய்வது போல் நடிப்பு

பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளின் உதவிக்காக உதவியாளர் ஒருவர் மட்டுமே வார்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அப்படி அனுமதிக்கப்படும்போது சில நேரங்களில் உறவினர்கள் அல்லாதோர் உதவி செய்வதை போன்று நடித்து குழந்தையை திருடிச் செல்லும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்தியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் ஒருவருக்கு கடந்த அக்டோபர் 4-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும், சேயும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனிடையே அந்த பெண்ணிடம் பழகிய 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவர் தன்னுடைய நாத்தனாருக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், அதற்கு உதவியாக வந்துள்ளதாகவும், உங்களுக்கும் உதவி செய்வதாகவும் கூறினார்.

குழந்தை மீட்பு

இதை நம்பிய குழந்தை பெற்ற பெண் தன்னுடைய குழந்தையை பார்த்து கொள்ளுவதற்கு அந்த பெண்ணை அனுமதித்தார். திடீரென குழந்தையை காணவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதுடன், ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, குழந்தை பெற்ற பெண்ணுடன் பழகிய பெண் கட்டை பையுடன் வெளியே சென்றதும், குழந்தையை கட்டை பையில் வைத்து கடத்தி சென்றதும் தெரியவந்தது.

24 மணிநேரத்தில் அந்த குழந்தையை போலீசார் மீட்டனர். இது போன்று மற்றுமொரு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நவீன கேமராக்கள் ஏற்கனவே இடம் பெற்று இருந்தாலும் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்கவும், குழந்தைகளை யாரும் மாற்றி எடுத்துவிடாமல் இருக்கவும் பார்கோடு வசதியுடன் கூடிய ஸ்கேனர் கருவியை நிறுவ ஆஸ்பத்திரி நிர்வாகம் முடிவு செய்தது.

ஸ்கேனர் கருவி

அதன்படி மகப்பேறு அவசர சிகிச்சை பிரிவின் நுழைவு வாயிலில் பார்கோடு வசதியுடன் கூடிய ஸ்கேனர் கருவி வைக்கப்பட்டுள்ளது. பிரசவத்திற்காக வரக்கூடிய கர்ப்பணியின் புகைப்படம், அவருக்கு உதவியாளராக இருக்கக்கூடியவர்கள் புகைப்படம் ஆகியவற்றை பெற்று பார்க்கோடு வசதியுடன் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையின் கை அல்லது காலில் பார்க்கோடு வசதியுடன் அட்டை அணிவிக்கப்படுகிறது.

மகப்பேறு அவசர சிகிச்சை பிரிவில் இருந்து யாராவது குழந்தையை எடுத்து கொண்டு வெளியே வந்தால் இந்த ஸ்கேனர் கருவியை கடந்து தான் செல்ல வேண்டும். அப்படி கடந்து செல்லும்போது குழந்தையின் காலில் பார்க்கோடு வசதியுடன் கூடிய அட்டை இல்லையென்றாலும், அந்த குழந்தையை எடுத்து செல்பவர்களின் கழுத்தில் அட்டை இல்லையென்றாலும் ஒலி எழுப்பப்படுகிறது.

உடனே பாதுகாப்பு பணியில் இருக்கக்கூடிய காவலர்கள் உஷாராகி அந்த குழந்தையையும், அந்த குழந்தையை எடுத்து வந்த உதவியாளரையும் கண்காணிக்க முடியும். குழந்தையின் கை அல்லது கால்களில் அணிவிக்கப்பட்டுள்ள பார்க்கோடு அட்டையையும், அந்த குழந்தையை எடுத்து வரக்கூடிய உதவியாளர் அல்லது பிரசவித்த பெண்ணிடம் உள்ள பார்க்கோடு அட்டையையும் இருந்தால் ஒலி எழுப்பாது. மேலும் அந்த அட்டைகளை ஸ்கேன் செய்து சரிபார்க்கும்போது, அங்கே உள்ள அகன்ற திரையுடன் கூடிய டி.வி.யில் இவர்களை பற்றிய முழு விவரம் ஒளிபரப்பப்படுகிறது.

தனியார் ஆஸ்பத்திரியை மிஞ்சியது

இதன்மூலம் குழந்தை இவர்களுடையது தான் என எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. இதேபோல் பிரசவம் ஆன பிறகு தாயும், சேயும் அனுதிக்கப்படக்கூடிய கட்டிடத்தின் நுழைவு வாயிலிலும் பார்க்கோடு வசதியுடன் கூடிய ஸ்கேனர் கருவி வைக்கப்பட்டுள்ளது.

தனியார் ஆஸ்பத்திரிகளில் கூட இதுபோன்ற வசதிகள் அதிகம் இடம் பெறவில்லை.

தனியார் ஆஸ்பத்திரியையும் மிஞ்சும் அளவுக்கு ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் நவீன ஸ்கேனர் கருவி வைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்