உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்

Update:2023-06-14 22:12 IST


திருப்பூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். பேண்டு வாத்தியங்கள் முழங்க இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர்.

தொடக்கப்பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் கடந்த 12-ந் தேதி தொடங்கப்பட்டு மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். இந்தநிலையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

முதன்முறையாக பள்ளிக்கு அடியெடுத்து வைக்கும் எல்.கே.ஜி. குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அழைத்து வந்தனர். சில குழந்தைகள் பள்ளிக்கு வந்ததும் கதறியழுதபடி இருந்தது. அந்த குழந்தைகளை சமாதானப்படுத்தி பள்ளி வகுப்பறையில் அமர வைப்பதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் படாதபாடுபட்டனர்.

இனிப்பு வழங்கி வரவேற்பு

அதுபோல் 1-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவ-மாணவிகள் உற்சாகமாக சீருடை அணிந்து பெற்றோருடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு வந்த சிறுவர்களை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றார்கள்.

அரசு பள்ளிகளை போன்று தனியார் பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் சென்றதை காண முடிந்தது.

நோட்டு புத்தகங்கள்

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நேற்று நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. ஒருவாரத்துக்குள் அனைவருக்கும் நோட்டு புத்தகங்கள் வழங்கி முடிக்கும் வகையில் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அதுபோல் சீருடை, காலனி உள்ளிட்டவை குழந்தைகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்