லாரி மோதி பள்ளி மாணவன் பலி

நத்தத்தில், சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். இதனை கண்டித்து, ெபாதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-10 18:45 GMT


பள்ளி மாணவன் பலி


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கர்ணம் தெருவை சேர்ந்தவர் பொன்னழகப்பன். அவருடைய மகன் குருபா (வயது 7). இவன், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.


நேற்று காலை பள்ளிக்கு குருபா புறப்பட்டு சென்றான். அவன் நத்தத்தில் மூன்றுலாந்தர் அருகே சாலையை கடக்க முயன்றான். அப்போது கொட்டாம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி அவன் மீது மோதியது. இதில் குருபா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். உடனே லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார்.


இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


சாலை மறியல்


இதற்கிடையே டிப்பர் லாரி மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள், வியாபாரிகள் திண்டுக்கல்-கொட்டாம்பட்டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.


பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளிக்கு அருகே அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


இந்த விபத்து தொடர்பாக நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிப்பர் லாரி மோதி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Tags:    

மேலும் செய்திகள்