பொள்ளாச்சி
கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், அந்த வாகனங்களை முறைப்படுத்தவும் அரசு உத்தரவிட்டு உள்ளது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கழிவுநீர் வாகனங்களில் தகுதி சான்று, பெர்மிட், வாகன புகை சான்று, காப்பீடு போன்ற ஆவணங்களை இல்லாதது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் 5 கழிவுநீர் வாகனங்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், கழிவுநீர் வாகனங்களை பதிவு செய்யும் போது கழிவுநீர் டேங்கர் லாரி என்று தான் பதிவு செய்ய வேண்டும். மேலும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் போதிய ஆவணங்கள் இல்லை. எனவே அபராத தொகையை செலுத்தி தகுதி சான்று, பெர்மிட், காப்பீடு, வாகன புகை சான்று போன்ற ஆவணங்களை பெற்ற பிறகு தான் வாகனங்கள் விடுவிக்கப்படும் என்றனர்.