தினசரி வாடகைக்கு கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும்

கோவை மருதமலை அடிவாரத்தில் தினசரி வாடகைக்கு கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் நரிக்குறவ மக்கள் மனு அளித்தனர்.;

Update:2023-03-21 00:15 IST

கோவை

கோவை மருதமலை அடிவாரத்தில் தினசரி வாடகைக்கு கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் நரிக்குறவ மக்கள் மனு அளித்தனர்.

குறைதீர்ப்பு கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள், தங்களது குறைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர். இதே போல் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் தலைமை தாங்கினார். இதில் நரிக்குறவர் இன மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மருதமலை அடிவாரத்தில் நாங்கள் 25 ஆண்டு காலமாக ஊசி, பாசி மணிகளை விற்பனை செய்யும் கடைகளை வைத்து நடத்தி வருகிறோம். இதுவரை தினசரி வாடகையாக கடைகள் ஒவ்வொன்றிற்கும் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை என வாடகைக்கு கடைகளை நடத்தி வந்தோம். ஆனால் இப்பொழுது தினசரி வாடகையை ரத்து செய்து, ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு கடைகளையும் தனித்தனியாக ஏலம் விட வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் ஏழை, எளிய மக்களாகிய நாங்களும் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைப் பெண்கள் ஆகியோர் ஆண்டுக்கு ஒரு முறை மொத்தப் பணத்தையும் செலுத்தி ஏலம் எடுக்க முடியாது. ஆகவே எங்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இத்தனை வருடங்களாக இருந்த நடைமுறையே தொடர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சாலைகளில் சுற்றி திரியும் பசு மாடு

விஷ்வ ஹிந்து பரிசத் பஜ்ரங்தள் அமைப்பினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகர் முழுவதும் பல இடங்களில் பசுமாடுகள் சுற்றி திரிந்து வருகிறது. இதனால் சாலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு இடையூறாக உள்ளது. அது மட்டுமல்லாமல் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே பசு மாடுகளை ரோட்டில் விடும் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட வாடகைக்கு குடியிருப்போர் சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை சூலூர் வட்டம் பாரதிபுரம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை எனவே தாங்கள் நடவடிக்கை எடுத்து உடனே வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்