சிறுவாணி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 18 செ.மீ. மழை பெய்ததால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்தது. அணையை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.;

Update:2022-08-05 21:17 IST

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 18 செ.மீ. மழை பெய்ததால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்தது. அணையை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

சிறுவாணி அணை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கோவை மக்களின் குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

அணை கேரள வனப்பகுதியில் இருந்தாலும் தண்ணீர் எடுக்கும் உரிமை தமிழகத்துக்கும், அணையை பராமரிக்கும் உரிமை கேரளாவிடமும் உள்ளது. இதற்காக தமிழகம் சார்பில் கேரளாவுக்கு ஆண்டுதோறும் பராமரிப்பு கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது.

கேரளாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

அதுபோன்று சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது.

41 அடியை தாண்டியது

அணைக்கு வரும் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்ததால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி சிறுவாணி அணையின் நீர்மட்டம் 41.25 அடியை தாண்டியது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்து வருகிறது. அணையில் இருந்து 10 கோடியே 70 லட்சத்து 14 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது.

இதில் கோவை மாநகர பகுதிக்கு 10 கோடியே 1 லட்சத்து 40 ஆயிரம் தண்ணீர் வழங்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 40 அடியை தாண்டியதால், தமிழக குடிநீர் வடிகால் வாரிய மேற் பார்வை பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாக பொறியாளர்கள் மீரா, ஜான்சன், உதவி நிர்வாக பொறியாளர் பட்டன், இளநிலை பொறியாளர் தம்பிராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று சிறுவாணி அணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

18 செ.மீ. மழை

கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகு சிறுவாணி அணையில் நீர்மட்டம் 45 அடி வரை மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 42 அடியை தாண்டியதும் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

எனவே தற்போது அணையில் ஆய்வு மேற்கொண்டு 45 அடியை தாண்டினால் மட்டுமே அணை யில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டு உள்ளது. அது தொடர்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அணைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி யில் 18 செ.மீட்டர் மழையும், அடிவார பகுதியில் 6 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்