சிவகங்கை: மருதிப்பட்டி பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா...!
சிவகங்கை அருகே மருதிப்பட்டி பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா விமர்சையாக நடைபெற்றது.;
சிவகங்கை மாவட்டம், மருதிபட்டி ஊராட்சியில் உள்ளது மருதிப்பட்டி பெரிய கண்மாய்.இக்கண்மாய் சுமார் 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது.இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் இக்காண்மாய் நீரை பயன்படுத்தி பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் கண்மாயில் தண்ணீர் வற்றிய நிலையில் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.அதன்படி இன்று காலை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிங்கம்புணரி,காளாப்பூர், எஸ்.வி.மங்கலம்,பிரான்மலை,சிலநீர்பட்டி,கோவில்பட்டி,தெக்கூர் திருக்களாப்பட்டி போன்ற பகுதியில் இருந்த பொதுமக்கள், மீன்பிடியாளர்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்மாய் கரையில் கூடி மீன்பிடி திருவிழாவிற்கு தயாரானார்கள்.
மருதிபட்டி கிராம முக்கியஸ்தர்கள் காலை 7 மணிக்கு கண்மாய் கரையில் நின்றபடி பச்சைக்கொடி காட்ட மீன்பிடி திருவிழாவை தொடங்கிவைத்தனர். அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கண்மாய்க்குள் இறங்கி மீன்களை பிடிக்கத் தொடங்கினார்கள். பலவகை வலைகளை கொண்டு அவர்கள் மீன்களை பிடிக்க தொடங்கினர்.
இதில் கெண்டை, ஜிலேபி, கெளுத்தி போன்ற மீன்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றது. குறிப்பிட்ட அளவிற்கு மேல் பாசிகள் அதிகமாக இருந்ததால் மீன்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் திணறினர். இதனால் ஒரு பகுதியை மட்டுமே மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் குறிப்பிட்ட மீன்கள் கிடைக்கப்பெற்றன. இதனால் அருகில் இருந்த கிராமங்களில் முழுவதும் மீன் குழம்பு வாசனை கமகமத்தது.