சிறு, குறு விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-06-13 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சொட்டுநீர் பாசனம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 1600 எக்டேர் பரப்பளவுக்கு ரூ.12.கோடியே 96 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. சிறு, குறு விவசாயிகள் 1 ஏக்கர் முதல் அதிகபட்சம் 5 ஏக்கர் வரை பயன்பெறலாம். இதர விவசாயிகள் 12.5 ஏக்கர் வரை நிலத்தில் சொட்டுநீர் பாசம் அமைத்துக் கொள்ளலாம். நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஆழ்துறை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம், டீசல் மோட்டார் அல்லது மின் மோட்டார் அமைத்திட ரூ.15 ஆயிரம், ஆழ்துளை கிணற்றில் இருந்து நீரை எடுத்து வருவதற்கு குழாய்கள் அமைத்திட ரூ.10 ஆயிரம், தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்திட ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

ஆவணங்கள்

நுண்ணீர் பாசனத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் இந்த துணை நீர் மேலாண்மை சிறப்பு திட்டத்திலும் இணைந்து கொள்ளலாம். விவசாயிகள் கணிணி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நிலவரைபடம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3, தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட சிறு, குறு விவசாயி சான்று அட்டை, நீர், மண் பரிசோதனை அட்டை, வங்கிகணக்கு புத்தகம் நகல் ஆகிய ஆவணங்களை, அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அலுவலகத்தில் கொடுத்து பெயரை பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்