ரேஷன் அரிசி கடத்தல்:புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.;
ஊட்டி: பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசியை சிலர் முறைகேடாக கடத்தி, கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர். இதை தடுக்கும் பொருட்டு தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே அத்தியாவசிய பொருட்களை கடத்துபவர்கள் பற்றியும், ரேஷன் பொருட்கள் பதுக்கல் குறித்தும் பொதுமக்கள், 18005995950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும். இதற்காக மாநில உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு உள்ளது என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் நீலகிரியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தெரியுமாறு இலவச எண் குறித்த பதாகைகள் வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.