அதிவேக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் அதிநவீன ரேடார் கேமராக்கள்

அதிவேக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் அதிநவீன ரேடார் கேமராக்கள்;

Update:2023-07-29 01:00 IST

கோவை

கோவையில் ஒரே நேரத்தில் 32 வாகனங்களை கண்காணிக்கும் வகையிலான அதிவேக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் ரேடார் கேமராக்களை இயக்கி மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

ரேடார் கேமராக்கள்

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விதிமீறல்களை தடுக்கவும் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் அதிதீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கோவை- அவினாசி ரோடு பி.ஆர்.எஸ்.பயிற்சி பள்ளி வளாக போலீஸ் மருத்துவமனை எதிரே, கோவை- சத்தி ரோடு அம்மன் குளம் பஸ்நிறுத்தம் மற்றும் பாலக்காடு ரோடு குனியமுத்தூர் பி.கே.புதூர் ஆகிய 3 முக்கிய சாலைகளில் ரூ.40 லட்சத்தில் அதிநவீன 3-டி ஸ்பீடு ரேடார் என்ற தானியங்கி வேக அளவீடு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த சாலைகளில் 40 கி.மீ. வேகத்துக்கு அதிகமாக செல்லும் வாகனங்கள் ரேடார் கேமராக்கள் மூலம் கண்டறிய முடியும். அப்போது இதற்கான உரிய ஆதாரத்துடன் வாகன உரிமையாளருக்கு எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலம் இ-செலான் அனுப்பி வைக்கப்படும். கோவை- அவினாசி ரோடு பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி வளாக போலீஸ் மருத்துவமனை எதிரே நடந்த நிகழ்ச்சியில் இந்த ரேடார் கேமராக்களின் செயல்பாட்டை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

40 கி.மீ.க்கு மேல் சென்றால் அபராதம்

கோவை மாநகரில் போக்குவரத்தை சீர் செய்யவும், விபத்துக்களை தடுப்பதற்காகவும் கோவை மாநகர போலீஸ் சார்பில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி ரோடு, சத்தி ரோடு, பாலக்காடு ரோடு ஆகிய 3 பிரதான சாலைகளில் அதிநவீன 3டி ஸ்பீட் ரேடார் தானியங்கி வேக கட்டுப்பாட்டு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன்மூலம் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க முடியும். இதற்கான உரிய ஆவணங்கள் வாகன உரிமையாளருக்கு இ- செலான் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தானியங்கி வேக கண்காணிப்பு கருவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் இணைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஒரே நேரத்தில் 32 வாகனங்கள் வரை கண்காணிக்க இயலும். இரவு நேரங்களில் கூட வண்டியின் எண்ணை பதிவு துல்லியமாக கண்டறியும் நவீன வசதி உள்ளது. எனவே 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்கள் சென்றால், சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு உடனடியாக அபராத ரசீது, இ- செலான் முறையில் அனுப்பி வைக்கப்படும். எனவே கோவை மாநகருக்குள் வாகனங்களை இயக்குபவர்கள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. பதிவு எண் இல்லாத வாகனங்கள் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன், உதவி கமிஷனர் சரவணன் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்


Tags:    

மேலும் செய்திகள்