நான் முதல்வன் திட்டம்; இளைஞர்கள் இலக்குகளை எளிதில் ஈட்டி வெற்றி குவிக்கின்றனர் - உதயநிதி ஸ்டாலின்
இந்தியாவின் சமூக வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் குடிமைத் தேர்வுகளில் நான் முதல்வன் திட்டத்தால் இலக்குகளை எளிதில் ஈட்டி இளைஞர்கள் படிப்படியாக வெற்றி குவிக்கின்றனர் ! - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ் நாட்டுப் போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கான ஒரு புதிய சூழலில் கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக, இந்தியாவின் சமூக வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது. கல்வியும் வாய்ப்புகளும் ஒரு சிலருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையின் மீதே மாநிலத்தின் இந்த முன்னேற்றம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தத்துவம் தலைமுறை பலவற்றை வறுமையிலிருந்து மீட்டெடுத்ததுடன், எழுத்தறிவை விரிவுபடுத்தி, இந்தியாவில் சமூக ரீதியாக மிகவும் முன்னேறிய சமூகங்களில் ஒன்றாகத் தமிழ்நாட்டை மாற்றியது.
இருப்பினும், 2017-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு கசப்பான உண்மை வெளிவரத் தொடங்கியது: தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில், குறிப்பாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டின் பங்களிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தன. இதற்குத் தரமான பயிற்சி பெறுவதில் உள்ள ஏற்றத் தாழ்வுகள், அதிகப்படியான நிதிச் சுமைகள், போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டத் தேவைப்படும் முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததுமே முக்கியக் காரணங்களாக அமைந்தன. குறிப்பாக, பெருநகரங்களுக்கு வெளியே கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு முறையான வழி காட்டல் கிடைக்கவில்லை. இதனால், 2021-ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 27 ஆக மிக மிகச் சரிந்தது.
திறமையான நிர்வாகிகளையும், சீர்திருத்தச் சிந்தனை கொண்ட அதிகாரிகளையும் உருவாக்கிய பெருமை மிக்கத் தமிழ்நாட்டிற்கு, இந்தச் சரிவு ஏமாற்றத்தை அளித்ததோடு மட்டுமல்லாமல், ஒரு உடனடி மாற்றத்திற்கான தேவையையும் உணர்த்தியது.
நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் (NMCE): ஓர் எண்ணம் நிறுவனமாக உருவெடுத்த கதை. இந்தச் சரிவைக் கண்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் திராவிட நாயகர் 2023 மார்ச் 7 அன்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் 'நான் முதல்வன்
போட்டித் தேர்வுகள் பிரிவு' (NMCE) என்ற புதிய பிரிவை உருவாக்குமாறு எனக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்தத் திட்டம் ஒரு அலுவலகக் கூட்டத்தில் மட்டும் உருவானது அல்ல; பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நடத்திய உரையாடல்களின் விளைவாக உருவாக்கப்பட்டது. அவர்களில் பலர் கூறியது ஒன்றே: "படிக்க வேண்டும் என்ற ஊக்கம் இருந்தது, ஆனால் தொடருவதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் இல்லை."
'நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு' என்பது ஒரு குறுகிய காலமானிய உதவி அல்ல, அது ஒரு கட்டமைப்புச் சீர்திருத்தம். போட்டித் தேர்வுகளை எளிதில் அணுகக் கூடியதாகவும், குறைந்த செலவிலானதும், கட்டுப்படியாகக் கூடியதாகவும், லட்சியக் கனவாகவும் மாற்றுவதே இதன் நோக்கம். சமூக நீதியின் முன்னோடியான தமிழ்நாடு, நவீன வேலை வாய்ப்புகளில் சம வாய்ப்பை உறுதி செய்வதிலும் முன்னோடியாக இருக்கும் என்ற நம்பிக்கையை இளைஞர்களிடையே மீட்டெடுப்பதே இதன் குறிக்கோள்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் கனவுத் திட்டமான, ஒவ்வொரு மாணவரையும் முதல் தலைமுறை வெற்றியாளராக மாற்றும் 'நான் முதல்வன்' திட்டத்தின் ஒரு பகுதியாக இது செயல்படுகிறது.
சென்னை அல்லது டெல்லி போன்ற நகரங்களில் உள்ள மாணவர்களுக்குச் சிறந்த பயிற்சி மையங்கள் எளிதில் கிடைத்தன. ஆனால், கடலூர் அல்லது திண்டுக்கல் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் போதிய பாடப் புத்தகங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் இன்றித் தவித்தனர். பல திறமையான மாணவர்கள் பயிற்சிச் செலவையோ அல்லது வெளியூர் சென்று தங்குவதற்கான செலவையோ ஏற்க முடியாமல் பாதியிலேயே படிப்பைக் கைவிட்டனர்.
இந்த ஏற்றத் தாழ்வைச் சரிசெய்ய 'நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு' மூன்று தூண்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது:
1) நிதிஉதவி தொழில் முறைப் பயிற்சி
2) தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சித் திட்டங்கள்
3) தாக்கத்தை ஏற்படுத்தும் உதவித் திட்டங்கள்
2023-24ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒன்றிய அரசுப் பணியாளர் ஆணையத்தின் குடிமைப் பணித் தேர்வு ஊக்கத் தொகைத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் 1,000 மாணவர்கள் வெளிப்படையான தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு முதல் நிலைத் தேர்வுக்குத் (Preliminary) தயாராக மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. முதன்மைத் தேர்வுக்குத் (Mains) தகுதி பெறுவோருக்கு ரூ.25,000 ஒருமுறை ஊக்கத் தொகையாகவும், 2025 முதல் நேர்முகத் தேர்வுக்குத் (Personality Test) தகுதி பெறுவோருக்கு ரூ.50,000 தொகையும் வழங்கிட திராவிட மாடல் அரசு முன்வந்து உதவிக்கரம் நீட்டியது. இதன்பின் மாணவர்கள் பங்கேற்பும், அரசின் உதவிகளும் ஊக்கப்படுத்தியதால் போட்டித் தேர்வு முடிவுகள் இத்திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளன :
2023-24 ஆம் ஆண்டில் 453 மாணவர்கள் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 2024-25: ஆம் ஆண்டில் இந்தஎண்ணிக்கை 559 ஆக உயர்ந்தது. அவர்களில் 134 பேர் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, 50 பேர் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றனர். அவர்களில் ஒருவரான சிவச்சந்திரன் அகில இந்திய அளவில் 23-வது இடத்தைப் பிடித்து தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றார் .
2025-26: ஆம் ஆண்டில், 659 பேர் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 155 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர், இவர்களில் 87 பேர் திராவிட மாடல் அரசின் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்தில் (AICSCC) பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் துடிப்பான தூய தமிழர் நேய உணர்வுக்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றியாகும்.
இத்தகைய புள்ளி விவரங்களுக்கும் மேலாக வெற்றி என்பது ஒருவரது பொருளாதார நிலையைப் பொறுத்தது அல்ல, அவருடைய உழைப்பைப் பொறுத்தது என்ற நம்பிக்கையை இது மீட்டெடுத்துள்ளது, இது ஒரு சமூக மாற்றத்தின் சான்று.
'நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு' இன் உண்மையான வெற்றி அதன் புள்ளி விவரங்களில் இல்லை, அது ஏற்படுத்திய உளவியல் மாற்றத்தில் உள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் தேசியத் தேர்வுகளை எளிதில் எட்டிப் பிடிக்கக்கூடிய வெற்றி இலக்குகளாகப் பார்க்கின்றனர். சிறிய நகரங்களில் பரவிவரும் இந்தத் தன்னம்பிக்கையே இத்திட்டத்தின் மிகப்பெரிய வெற்றிக்குச் சீரிய சான்றாகும்.
ஒரு ஏழை பீடித் தொழிலாளியின் மகள் ஐ.பி.எஸ் அதிகாரி ஆனார். இந்த மகத்தான வெற்றிக்கு எடுத்துக்காட்டு தென்காசியைச் சேர்ந்த எஸ். இன்பா என்பவரின் கதை ஒரு சிறந்த உதாரணம். ஓய்வு பெற்ற பேருந்து நடத்துநர் மற்றும் பீடித் தொழிலாளியின் மகளான இவர், மாவட்ட நூலகத்தைத் தனது இரண்டாவது இல்லமாக மாற்றிக் கொண்டார். 'நான் முதல்வன்' திட்டத்தின் பயனாக, 2023ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று இவர் ஐபிஎஸ் (IPS) அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய வெற்றி தனிப்பட்ட ஒன்றல்ல; தடைகள் நீக்கப்பட்டால், சாதனைகளை நிகழ்த்தி மாற்றங்களைப் படைப்பவர்கள் தமிழர்கள் என்பதற்கான அடையாளம் ஆகும்.
தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சி (Residential Coaching) குடிமைப் பணித் தேர்வுகளுக்கு அப்பால், மத்திய அரசுப் பணித் தேர்வு -( SSC), ரெயில்வே மற்றும் வங்கித் தேர்வுகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி உள்ளிட்ட வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
முதல் ஆண்டில் பயிற்சி பெற்ற 510 மாணவர்களில், 80 பேர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ரெயில்வே துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 2025 அக்டோபரில் இரண்டாம் கட்டப் பயிற்சிகள் கூடுதல் வசதிகளுடன் தொடங்கப்படுகின்றன.
தர்மபுரியைச் சேர்ந்த கே. புவனேஸ்வரி என்ற விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி, இந்தத் திட்டத்தின் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேளாண் அதிகாரியாகப் (Agriculture Field Officer) பொறுப்பேற்றுள்ளார். வருமானமோ அல்லது இருப்பிடமோ ஒருவரின் வெற்றிக்குத் தடையல்ல என்பதை இது நிரூபிக்கிறது.
புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இத்திட்டத்தில் முழுமையான வெளிப் படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது: தகுதி அடிப்படையில் தேர்வு, நேரடியாக வங்கிக் கணக்கில் உதவித் தொகை, மற்றும் முறையான தணிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.
'நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு' மூலம், தமிழ்நாடு ஒரு உள்ளடக்கிய மற்றும் தகுதி அடிப்படையிலான பொதுச் சேவைப் பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. சிறந்து விளங்குவதும், சமத்துவத்தைப் பேணுவதும் ஒன்றிற் கொன்று முரணானவை அல்ல, மாறாக அவை ஒன்றை ஒன்று முழுமைப்படுத்துபவை என்ற செய்தியை இது உலகிற்கு பறைசாற்றுகிறது !
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.