மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் மனதை வென்ற நமது பிரதமர் - நயினார் நாகேந்திரன்
தமிழின் அரும்பெருமைகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஒரு பிரதமரைப் பெற்றதற்கு தமிழினமே மகிழ்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாத இறுதியிலும் பாரத மக்களிடையே உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சியின் இன்றைய 129 ஆவது அத்தியாயத்தில் நமது தமிழின் பெருமையை உலகிற்கு மீண்டுமொருமுறை அவர் எடுத்துக் கூறியது மறக்க முடியாத தருணம்.
“தமிழ் கற்போம்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த ஆண்டின் காசி தமிழ்ச் சங்கமத்தில், வாரணாசியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சிறப்புத் தமிழ் வகுப்புகள் நடத்தப்பட்டன என்பதைக் குறிப்பிட்ட நமது பாரதப் பிரதமர், நாட்டின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் கூட தமிழ் மொழிமீதான ஈர்ப்பு துளிர்விடுவது மகிழ்ச்சிகரமானது எனவும், இதுவே நம் பாரதத்தின் ஒற்றுமைக்கான இலக்கணம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், பிஜி நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் முதன்முறையாக கொண்டாடப்பட்ட தமிழ்த் திருநாளில் குழந்தைகள் தமிழில் கவிதைகள் வாசித்தும், உரையாற்றியும் பேசினார்கள் என்பதை மிகுந்த பெருமையுடன் மக்களிடையே பகிர்ந்து கொண்டார்.
வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் நமது தாய்மொழி தமிழின் அரும்பெருமைகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஒரு பிரதமரைப் பெற்றதற்கு ஒட்டுமொத்த தமிழினமே மகிழ்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.