தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவிலில் மார்கழி மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;

Update:2023-01-11 00:15 IST

கடையம்:

கடையம் அருகே தோரணமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு 1,001 படிகளுக்கு மேல், மலை உச்சியில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். அகத்தியர் மாமுனிவர் அமர்ந்து தமிழ் வளர்த்த மலை இது. இந்த மலையில் 64 சுனைகள் உள்ளன. இந்த சுனைகளில் உள்ள நீரை கொண்டே முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்.

அகஸ்தியர், தேரையர், சித்தர் வழிபட்ட இந்த தோரணமலை முருகன் கோவிலில் நேற்று அகஸ்தியர் பிறந்த ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டும், மார்கழி மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டியும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. நேற்று காலையில் கோவில் உண்டியல் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.

சிறப்பு வாய்ந்த தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து கணபதி ஹோமம், 8 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அதனை தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத தோரணமலை முருகன் திருக்கல்யாணம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையுடன் அன்னதான பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செண்பகராமன் செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்