சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

நாமக்கல் மாவட்டத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-10-12 18:45 GMT

புரட்டாசி பிரதோஷம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டையொட்டி நந்தி மற்றும் சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரர், வெங்கரை, ரகுநாதபுரம் காவிரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர், பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர் மற்றும் கோப்பணம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள பரமேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அரிசிமாவு அபிஷேகம்

மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள அசலதீபேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷத்தையொட்டி பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, அரிசி மாவு, சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் உள்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனையும், விசேஷ பூஜையும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் ராசிபுரம் சிவன் கோவிலில் நேற்று பிரதோஷ விழாவையொட்டி நந்திக்கு தயிர், பால், திருமஞ்சனம் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்