விவசாயிகளுக்கு முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி பிரதம மந்திரியின் கவுரவ நிதி உதவித்தொகை விவசாயிகளுக்கு முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

Update: 2023-08-18 11:47 GMT

அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி பிரதம மந்திரியின் கவுரவ நிதி உதவித்தொகை விவசாயிகளுக்கு முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஏரி கால்வாய்களை தூர்வார வேண்டும். நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பிரதம மந்திரியின் கிஷான் கவுரவ நிதி உதவித்தொகை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

முறைகேடாக நிதியுதவி

இந்த திட்டத்திற்கு கடந்த 3 மாதங்களாக விண்ணப்பித்த விவசாயிகளுக்கு நிதியுதவி முறையாக கிடைப்பதில்லை. ஓய்வூதியம் வாங்கும், அரசு சம்பளம் வாங்கும் நபர்களுக்கு முறைகேடாக நிதியுதவி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி விவசாயிகளுக்கு முறையாக நிதியுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கியாஸ் சிலிண்டர் மானியம் அனைத்து தரப்பினருக்கும் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் வாரந்தோறும் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மாற்றுத்திறனாளிகள் வருகின்றனர். எனவே மாற்றுத் திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தாலுகா வாரியாக அல்லது பிர்கா வாரியாக மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.

பிரசவ வார்டில் இடவசதி இல்லை

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்திற்கு வேலை நாட்களில் விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் வருகின்றனர்.

அங்குள்ள பொது சுகாதார வளாகம் தண்ணீர் வசதியின்றி அசுத்தமாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டில் போதிய இடவசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதிபடுகின்றனர். எனவே பிரசவ வார்டினை பழைய அரசு மருத்துவமனைக்கு மாற்றினால் பயனுள்ளதாக அமையும்.

தரிசு நிலம் மேம்பாடு திட்டம் புதுப்பாளையம் வட்டாரத்தில் முறையாக செயல்படுத்தவில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சன்ன ரக நெல்லை மட்டுமே வாங்குகின்றனர்.

எனவே அதற்கு ஏற்ப வேளாண்மை துறையின் மூலம் நெல் விதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுப்பாளையும் பேரூராட்சியில் உள்ள சுடுகாட்டிற்கு சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

நல்லிணக்க நாள் உறுதிமொழி

முன்னதான கலெக்டர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதி மொழியினை அரசு அலுவலர்கள், விவசாயிகள் எடுத்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் அரகுமார், கலெக்டாின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்