திருப்பூரில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிரணி மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

மகளிர் அணி மாநாடு ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ என்ற தலைப்பில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.;

Update:2025-12-29 03:22 IST

சென்னை,

திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் மாநாட்டை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இதன்படி தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ என்ற தலைப்பில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்குகிறார்.

இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.

கரூர் மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி வரவேற்று பேசுகிறார். 234 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் சுமார் 2 லட்சம் பெண்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பெண்கள் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ. நன்றி கூறுகிறார். மகளிரணி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன்படி பெண்களின் வசதிக்காக மொபைல் கழிப்பறைகள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, தன்னார்வலர்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாடு முடிந்து செல்லும் பெண்களுக்கு இரவு உணவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, மாநாட்டை ஒட்டி பல்லடம் மற்றும் காரணம்பேட்டை பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தனித்திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்