கஞ்சா போதைக்கு அடிமையான மகன்.. தந்தை செய்த வெறிச்செயல்
திருமண நிச்சயதார்த்தம் நின்றதால் போதையில் தகராறு செய்கையில் இந்த விபரீதம் நிகழ்ந்தது.;
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அடுத்த பெருந்தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓவர்டன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (50). இவரது மகன் வெஸ்லி (வயது 29). இவர் ஆன்லைன் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வெஸ்லிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.
இவர்களது திருமண நிச்சயதார்த்த விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் இரு வீடுகளிலும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மணமகன் வெஸ்லியின் பின்னணி குறித்து பெண் வீட்டார் விசாரித்தனர். அப்போது வெஸ்லிக்கு கஞ்சா போதை பழக்கம் இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் போதைக்கு அடிமையானவருக்கு தங்கள் மகளை திருமணம் செய்து தர முடியாது என்று கூறி நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தனர். திருமணம் நின்ற செய்தியை அறிந்த வெஸ்லி, மிகுந்த ஆத்திரம் அடைந்து போதையில் வீட்டுக்கு சென்றார். தனது பழக்கத்தை பெண் வீட்டாருக்குத் தெரியப்படுத்தியது தனது குடும்பத்தினர்தான் என்று கூறி, தந்தை ஜான்சன் மற்றும் குடும்பத்தினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்கினார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாங்காத தந்தை ஜான்சன், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து வெஸ்லியைத் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த வெஸ்லி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், வெஸ்லியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தந்தை ஜான்சனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.