இருக்கன்குடி அணையில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை
இருக்கன்குடி அணையில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.;
இருக்கன்குடி அணையில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரூ.20 கட்டணம் வசூலிப்பதை தவிர்ப்பது, மேய்ச்சல் மாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதிப்பது, காட்டுப் பன்றிகள் இனத்தை வனவிலங்கு பட்டியலிலிருந்து நீக்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர். மேலும் இருக்கன்குடி அணையில் மணல் திருட்டை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வனத்துறை அதிகாரியிள் செயல்பாடுகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.
கொள்முதல் நிலையங்கள்
நெல் அறுவடை பணிகள் தொடங்கிவிட்டதால் 16 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுவதாகவும் ஆய்வுக்கு பின் தேவைக்கேற்ப நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும் தெரிவித்த கலெக்டர் 65,420 விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாய ஊக்கத்தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், தேசிய கூட்டுறவு துறை சர்க்கரை ஆலை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 58 லட்சத்து 5 ஆயிரத்து45 ஊக்கத்தொகை விடுவிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் வட்டாரத்திற்கு இரு விவசாயிகளிடமிருந்து விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகள் கருத்துகளை பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கால்வாய் சீரமைப்பு
வரத்து கால்வாயை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், வேளாண் இணை இயக்குனர் உத்தண்டராமன், கூட்டுறவு இணைப்பதிவாளர் செந்தில் குமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராஜலட்சுமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.