மாணவர்கள் பயனடையும் வகையில் சென்னை ஐ.ஐ.டி.யில் நவீன தபால் நிலையம் திறப்பு
சென்னை ஐ.ஐ.டி.யில் அடுத்த தலைமுறைக்கான என்.ஜென். தபால் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.;
சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள தபால் அலுவலக சேவைகள் நவீனமயமாக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கான என்.ஜென். தபால் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. ஐ.ஐ.டி. இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி திறந்து வைத்தார். பதிவாளர் ஜேன் பிரசாத், சென்னை தபால் துறை இயக்குனர் மேஜர் மனோஜ் உள்பட தபால் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற, சென்னை நகர மண்டல தபால் துறை இயக்குனர் ஜி.நடராஜன் கூறும் போது, 'பாரம்பரியமான தபால் சேவைகளை அடுத்த தலைமுறையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இளைஞர்களை மையமாக கொண்டு தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை இந்த தபால் நிலையம் வழங்குகிறது. குறிப்பாக ஸ்மார்ட் கவுண்டர், விரைவான தபால் மற்றும் பார்சல் சேவை, சேமிப்பு வங்கி, தபால் ஆயுள் காப்பீடு, ஆதார் சேவைகள் மற்றும் டிஜிட்டல் கட்டண வசதிகள், விசாலமான காத்திருப்பு பகுதிகளை கொண்டுள்ளது.
அத்துடன் காபி விற்பனை எந்திரம், இலவச வை-பை, புத்தகங்கள், பலகை விளையாட்டுகள், சார்ஜிங் போர்ட்கள் மற்றும் பிற பயனாளர்கள், மாணவர்கள் மற்றும் இளம் பயனாளர்களுக்கான பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தபால் துறையின் இந்த முயற்சி வளர்ந்து வரும் பயனாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பதன் மூலம் இளைஞர்களுடனான ஈடுபாட்டை வலுப்படுத்தி தபால் சேவைகளை தொடர்ந்து வழங்குவதற்கான அணுகுமுறையை வழங்குகிறது' என்றார்.