தமிழகத்தில் கடந்தாண்டு 6.90 லட்சம் பேர் இறப்பு

தமிழகத்தில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவிலும், மரண எண்ணிக்கை நிலைத்த சராசரி வரம்பிலும் இருந்து வருகிறது.;

Update:2026-01-20 00:20 IST

கோப்புப்படம் 

சென்னை,

தமிழகத்தில் தொடர்ச்சியாக பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டில் தமிழகத்தில் பிறந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 45 ஆயிரத்து 962 ஆகும். ஆனால் கடந்தாண்டு 8 லட்சத்து 2 ஆயிரத்து 628 குழந்தைகள்தான் பிறந்து இருக்கிறது. அதாவது 15.15 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இறப்பு விகிதங்களை பொறுத்தவரை ஆண்டுக்கு, ஆண்டு சீராக இருந்து வருகிறது.

கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை தமிழகத்தில் மொத்தம் 6 லட்சத்து 90 ஆயிரத்து 14 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக அரசின் பிறப்பு-இறப்பு தொடர்பான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மரண எண்ணிக்கை 6.9 லட்சம் என்ற சராசரி வரம்பில் தான் இருக்கிறது. 2024-ம் ஆண்டில் 6,95,680 மரணங்கள் பதிவாகிய நிலையில், 2025-ல் அது சுமார் 5,600 குறைந்து 6.90 லட்சமாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 2018 முதல் 2025 வரை தமிழகத்தில் மொத்தம் 54.28 லட்சம் பேர் இறந்துள்ளனர். அதாவது 2018-ல் 5,49,348 பேர், 2019-ல் 6,38,553 பேர், 2020-ல் 6,91,380 பேர், 2021-ல் 8,74,978 பேர், 2022-ல் 6,96,115 பேர், 2023-ல் 6,93,086 பேர், 2024-ல் 6,95,680 பேர், 2025-ல் 6,90,014 பேர் இறந்து உள்ளனர்.

அதில் 2021-ம் ஆண்டு கொரோனா காரணமாக அதிகளவு உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் இறப்பு எண்ணிக்கை சிறிதளவு குறைவதற்கான காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலத்தில் அவசர மருத்துவ சேவைகளின் விரிவாக்கம், மாவட்ட மருத்துவமனைகளில் உபகரண மேம்பாடு, இதய நோய் மற்றும் பாதிப்பு நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு ஆகியவை முக்கிய பங்கு வகித்திருப்பதாக கூறுகின்றனர்.

அதே வேளையில், தமிழகத்தில் முதியோர் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதால், ஆண்டுதோறும் 6.5 லட்சம் முதல் 7 லட்சம் வரையிலான மரணங்கள் பதிவாகும் நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடரும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். மேலும் அவர்கள் தமிழகத்தில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவிலும், மரண எண்ணிக்கை ஒரு நிலைத்த சராசரி வரம்பிலும் இருந்து வருவது மாநிலத்தின் மக்கள் தொகை அமைப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. புதிய தலைமுறை பிறப்பு குறைவதால், வரவிருக்கும் காலங்களில் தமிழகத்தின் மக்கள் தொகை வளர்ச்சி மந்தமாகி, முதியோர் சதவீதம் அதிகரிக்கும் 'வயது மாற்றம்' தெளிவாகக் காணப்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்