ஆற்றுத் திருவிழாவில் பலூன்களுக்கு காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு
பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவர்கள் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.;
கள்ளக்குறிச்சி,
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஒரு வாரமாக வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு பொங்கல் விழா, மாட்டுப்பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடிய மக்கள் 3-ம் நாளான நேற்று காணும் பொங்கலை குடும்பத்தினருடன் கொண்டாடினர்.
தொடா்ந்து பொங்கல் விழாவின் 5-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) ஆற்றுத்திருவிழா கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவர்கள் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக்காண பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான மக்கள் தென்பெண்ணையாற்றில் குவிந்தனர். அங்கு உற்சாகமாக குடும்பத்தினருடன் ஆற்றுத்திருவிழாவை கொண்டாடினர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் பலூன்களுக்கு காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் கலா என்ற பெண் உயிரிழந்துள்ளார். இருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மணலூர்பேட்டையில் சிலிண்டர் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் விசாரணை மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றுத் திருழாவில் நடந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிலிண்டர் வெடித்து விபத்து நடந்த இடத்தில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்தனர்.