நாளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது.;
சென்னை,
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியின் பிரதான கட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், நடிகர் விஜய் த.வெ.க. என்னும் புதிய கட்சியை தொடங்கியது முதல் காங்கிரஸ் கட்சிக்குள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடங்களில் போட்டி என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதற்கிடையே ராகுல்காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுனர் மற்றும் தரவு பகுப்பாய்வு துறை தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி அவ்வப்போது நடிகர் விஜய்யை சந்தித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையில் தொகுதி பங்கீட்டை தேசிய தலைமையே முடிவு செய்யும் என்றும், தேர்தல் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என்றும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., தலைமையில், மாநில செயற்குழு கூட்டம் நாளை (20.1.2026) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார். அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் திரு. சூரஜ் எம்.என். ஹெக்டே, திரு. நிவேதித் ஆல்வா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு தங்களது செய்தி நிறுவனத்தின் நிருபர், புகைப்படக் கலைஞர்/தொலைக்காட்சிக் குழுவினரை அனுப்பி வைத்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.