சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கைகலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை

சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.

Update: 2023-01-20 20:16 GMT

சேலம், 

கலந்தாய்வு கூட்டம்

சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்தால் 739 பேர் உயிர் இழந்துள்ளனர். இதில் 50 சதவீத உயிரிழப்புகள் ஹெல்மெட் அணியாமலும், செல்போன் பேசியபடியும் மோட்டார் சைக்கிளில் சென்றதால் ஏற்பட்டு உள்ளது. விபத்துகளை தடுக்கவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒத்துழைப்பு அவசியம்

தேவையான இடங்களில் சாலை விதிகள் தொடர்பான எச்சரிக்கை பலகைகள் வைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் ஆகிய 2 மாதங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காமலும், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 352 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.

அதே போன்று அதிவேகமாக வாகனம் ஓட்டிய 29 பேர், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய 290 பேர், செல்போன் பேசியபடி கார், மோட்டார் சைக்கிள் ஓட்டிய 24 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன விதிகளை கடைபிடிக்காத 630 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சாலை விபத்தில்லாத சேலம் மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்