தனியார் பஸ்களில் ஆபத்தான முறையில் மாணவர்களை ஏற்றிச்சென்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

தனியார் பஸ்களில் ஆபத்தான முறையில் மாணவர்கள், பொதுமக்களை ஏற்றிச்சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Update: 2022-11-24 18:45 GMT

விழுப்புரம்

ஆபத்தான பயணம்

அரசு, தனியார் பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டுகள் மற்றும் ஏணிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதை தவிர்த்திடும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியும், ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பள்ளி- கல்லூரிகளில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் மோகன், நேற்று அரசு சார்ந்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க சென்று கொண்டிருக்கும்போது விழுப்புரம்- செஞ்சி செல்லும் சாலையில் லட்சுமிபுரம் என்ற இடத்தில் ஒரு தனியார் பஸ்சில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டதை பார்வையிட்ட அவர், உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களிடம் இதுபோன்ற ஆபத்தான முறையில் படியில் தொங்கியவாறு பயணம் செய்யக்கூடாது எனவும், இந்த பஸ் இல்லையென்றால் அடுத்து வரும் பஸ்களில் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

எச்சரிக்கை

மேலும் அந்த தனியார் பஸ்சின் டிரைவர், கண்டக்டரிடம் இதுபோன்ற ஆபத்தான முறையில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களையோ, பொதுமக்களையோ ஏற்றிச்செல்லக்கூடாது என எச்சரித்ததுடன் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்