விஷம் கலந்த குளிர்பானம் குடித்த மாணவி உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுக்கப்பட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-05-23 07:00 GMT

திருச்சி,

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விஷம் கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்த 3 பேரை கைது செய்ய கோரி திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க மறுத்தும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கின் முழு விவரம்:-

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் இவர் பாய்லர் ஆலை பகுதியில் மணியம்மை நகரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிக்கு தினமும் சென்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 17-ந் தேதி வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அந்த மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் சாப்பிட்ட உணவில் விஷம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில், பாய்லர் ஆலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பாய்லர் ஆலை போலீசார் மருத்துவமனைக்கு சென்று, அந்த மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர்.

காதலிக்க மறுப்பு இதில் அந்த மாணவி போலீசாரிடம் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக தன்னை ஒருவன் பின்தொடர்ந்து வந்ததாகவும், கடந்த 11-ந் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, அந்த நபர் தன்னிடம் காதலிப்பதாக கூறியதாகவும், இதனால் அவரை தான் செருப்பால் அடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 12-ந் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, தன்னை காதலிப்பதாக கூறிய நபர் உள்பட 3 வாலிபர்கள் சேர்ந்து தன்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அருகில் உள்ள ஒரு சந்தில் வைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து குடிக்க செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 13-ந் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், பின்னர் வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு அதிகமானதால் கடந்த 17-ந் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாகவும், அந்த மாணவி வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். சாவு இந்த சம்பவம் குறித்து பாய்லர் ஆலை போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரை தேடி வந்த நிலையில், ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த மாணவி தனியார் மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்