சின்னசேலம் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கியமாணவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்புகள்ளக்குறிச்சியில் பரபரப்பு

சின்னசேலம் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால், கள்ளக்குறிச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-08-20 00:15 IST


கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலத்தை சேர்ந்த பழனிசாமி மகன் அபித்குமார் (வயது 18). இவர் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 15-ந்தேதி சுதந்திர தின விடுமுறை முடிந்து கடந்த 17-ந் தேதி இரவு கல்லூரி விடுதிக்கு அவர் வந்தார்.

தொடர்ந்து நேற்று முன்தினம் கல்லூரி வகுப்புக்கு சென்றார். வகுப்பறையில் இருந்த விரிவுரையாளர் துறை தலைவரை பார்த்து வருமாறு கூறினார். இதையடுத்து அங்கிருந்து சென்ற அபித்குமார், கல்லூரி விடுதி அறை மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது தொடர்பாக பழனிசாமி, சின்னசேலம் போலீசில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்து இருந்தார்.

உடலை வாங்க மறுப்பு

இந்த நிலையில், அபித்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று மாலை 3 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்தது.

அப்போது, அபித்குமார் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். மேலும் மாணவன் இறப்பு குறித்து விசாரணை செய்ய தனி அதிகாரி நியமனம் செய்ய வேண்டும் என்று கூறி, மாணவனின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

பேச்சுவார்த்தை

அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், மாணவன் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த வழக்கு குறித்து விசாரணை செய்ய திருக்கோவிலூர் துணை சூப்பிரண்டு மனோஜ் குமாரை நியமனம் செய்துள்ளதாக கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட அவர்கள், மாணவனின் உடலை பெற்றுக்கொள்ள சம்மதித்து சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்