அரசு பள்ளி வளாகத்துக்குள் தேங்கி நின்ற மழைநீரால் மாணவர்கள் அவதி

சங்கராபுரம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் மழைநீர் புகுந்ததால் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். இதை கண்டித்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-09-02 00:15 IST

சங்கராபுரம்

அரசு மேல்நிலைப்பள்ளி

சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண் மற்றும் பெண்கள் சுமார் 729 பேர் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் அப்பகுதியில் உள்ள கழிவுநீரும், மழைநீரும் இரண்டற கலந்து பள்ளி வளாகத்துக்குள் புகுந்து குளம்போல் தேங்கி நின்றது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வர கடும் சிரமப்பட்டனர். மேலும் சேற்றுக்கடி போன்ற நோய் பரவும் அபாய நிலையும் உருவானது.

பெற்றோர் முற்றுகை

இதை அறிந்த மாணவர்களின் பெற்றோர் நேற்று திடீரென பள்ளியை முற்றுயிட்டனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, மழைக்காலங்களில் மழை நீருடன், கழிவு நீரும் கலந்து பள்ளி வளாகத்துக்குள் புகுந்து விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளியில் சரியான முறையில் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. எனவே ஊராட்சி நிர்வாகமும், பள்ளி நிர்வாகமும் தலையிட்டு பள்ளி வளாகத்துக்குள் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று அவர்கள் போரட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்