வடபழனியில் அடுத்தடுத்து தீ விபத்து; சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு

வடபழனியில் அடுத்தடுத்து குடிசைகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் அங்கிருந்த 2 சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-16 04:59 GMT

சென்னை வடபழனி அழகிரி நகர், 5-வது தெருவில் அக்பர் அலி என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம் உள்ளது. இதில் தரை தளத்தில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையும், முதல் தளத்தில் உள்ள கடைகள் காலியாகவும், 2-வது தளத்தில் தனியார் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. மொட்டை மாடியில் தகடு சீட்டால் குடிசை அமைத்து அக்பர் அலிக்கு சொந்தமான டைல்ஸ் கடையில் வேலை செய்யும் 3 ஊழியர்கள் தங்கி உள்ளனர். நேற்று மாலை 3 ஊழியர்களும் வெளியே சென்றிருந்த நிலையில் மொட்டை மாடியில் உள்ள குடிசை தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த 2 கியாஸ் சிலிண்டர்களும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதற்கிடையில் இந்த கட்டிடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் 100 அடி சாலையில் உள்ள இரண்டு தளங்களை கொண்ட குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்பனை கடையிலும் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

அதேபோல் கோயம்பேடு, ரெயில் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசிக்கும் கீர்த்தி நடராஜன் (39) என்பவர் ஊருக்கு சென்றிருந்த நிலையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவால் அவரது வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. ஜன்னல் கண்ணாடியை உடைத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும் ஏ.சி. எந்திரம், 2 சைக்கிள்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவங்கள் குறித்து வடபழனி மற்றும் கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்