விவசாயி குடும்பத்தினர் திடீர் தர்ணா

நிலஅளவீடு செய்யக்கோரி விவசாயி குடும்பத்தினர் திடீர் தர்ணா விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

Update: 2022-11-28 18:45 GMT

விழுப்புரம்

விக்கிரவாண்டி தாலுகா மண்டபம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 39). விவசாயியான இவர் நேற்று காலை தனது தந்தை சுப்பிரமணியன், தாய் ராஜம்மாள் ஆகியோருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் திடீரென அவர்கள் 3 பேரும் அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்யாமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச்செய்தனர். அதன் பிறகு கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில், எங்களுக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலத்தை நில அளவீடு செய்யக்கோரி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் மற்றும் நில அளவை பிரிவு அலுவலகத்தில் மனு கொடுத்து 3 ஆண்டுகளாகியும் இதுநாள் வரையிலும் நிலஅளவீடு செய்யப்படவில்லை. நீதிமன்ற உத்தரவையும் அதிகாரிகள் மதிக்காமல் பக்கத்து நிலத்துக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அதிகாரிகள் நில அளவீடு செய்யாமல், அத்துகல் நடாமல் என்னையும் நடக்கூடாது என்று கூறி வருகின்றனர். எனவே இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற கலெக்டர் மோகன், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்