தாய், தங்கை தூக்குப்போட்டு தற்கொலை

சூளகிரி அருகே விபத்தில் மகன் பலியான வேதனையில் தாயும், தங்கையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். முன்னதாக அவர்கள் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.

Update: 2023-10-26 19:30 GMT

சூளகிரி:

சூளகிரி அருகே விபத்தில் மகன் பலியான வேதனையில் தாயும், தங்கையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். முன்னதாக அவர்கள் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.

விபத்தில் சாவு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா தோரிப்பள்ளி அருகே உள்ள உங்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமப்பா (வயது 52). டிரைவர். இவருடைய மனைவி மீனாட்சி (47). இவர்களுக்கு கிரி (23) என்ற மகனும், காவியா (18) என்ற மகளும் இருந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிரி ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிரி கடந்த மாதம் 7-ந் தேதி இறந்தார். இதனால் அவருடைய தாய் மீனாட்சி, சகோதரி காவியா ஆகியோர் வேதனை அடைந்தனர். இதற்கிடையே கிரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர்கள் உறவினர்களிடம் கூறி வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக போலீசிலும் புகார் கொடுத்தனர். எனினும் கிரி இறந்ததை ஏற்று கொள்ள முடியாமல் தாய், தங்கை இருவரும் விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் மாலை வெங்கட்ராமப்பா வெளியே சென்றிருந்தார். அப்போது வீட்டில் மீனாட்சி, காவியா ஆகியோர் மட்டும் இருந்தனர்.

தற்கொலை

இந்த நிலையில் வெங்கட்ராமப்பா வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்டநேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மனைவி, மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர். அப்போது உடல்களை எடுக்க உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கிரியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தாயும், சகோதரியும் தொடர்ந்து சூளகிரி போலீசில் தெரிவித்தும், கண்காணிப்பு கேமரா பதிவுகளை காட்டுமாறு கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் 2 உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் எனக் கூறினர்.

சோகம்

இதைத்தொடர்ந்து உறவினர்களிடம் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், பாகலூர் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நேரில் சென்று புகார் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதில் உறவினர்கள் சமாதானம் அடைந்தனர். அதன்பிறகு 2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக தற்கொலைக்கு முன் காவியா உருக்கமாக 2 பக்கத்தில் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மகன் பலியான நிலையில் வேதனையில் தாயும், தங்கையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்