விடை பெற்றது 2025; நல்வரவாகிறது 2026..!

இன்று புதிதாகப் பிறந்துள்ள 2026-ம் ஆண்டு பல எதிர்பார்ப்புகளோடு நல்வரவாக தொடங்கி உள்ளது.;

Update:2026-01-01 03:57 IST


2025-ம் ஆண்டு, நேற்றோடு கடந்து சென்றுவிட்டது. இன்று 2026 உதயமாகியிருக்கிறது. கிராமங்களில் குழந்தைகளுக்கு ‘’தோசையம்மா தோசை, பாட்டி சுட்ட தோசை. அரிசி மாவும், உளுந்த மாவும் கலந்து சுட்ட தோசை’’ என்று பாடிக்காட்டுவார்கள். அதுபோலத்தான் 2025-ம் ஆண்டு பல சாதனைகளும், சவால்களும் கலந்த ஆண்டாகவும், மகிழ்ச்சியும், சில சோகங்களும் சேர்ந்த ஆண்டாகவும் இருந்தது.

2-வது முறையாக டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றவுடனேயே இந்தியா உள்பட பல நாடுகளுக்கு மிக அதிகமான வரியை விதித்து விட்டு, எச்-1 பி விசா நடைமுறைகளையும் கடுமையாக்கினார். 2025-ல்தான் தங்கம் விலை ஏழை, நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்தது. “நான் உயர உயர போகிறேன், நீயும் வா” என்று அழைப்பது போல வெள்ளி விலையும் உயர்ந்தது.

ஏப்ரல் 22-ந் தேதி காஷ்மீர் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் கண்மூடித்தனமாக சுட்டதால் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அதற்கு பதிலடியாக மே மாதம் 7-ந் தேதி இந்திய ராணுவத்தினர் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து துல்லிய தாக்குதல் நடத்தினர். இது உலக அரங்கில் இந்தியாவை நெஞ்சை நிமிர்த்த வைத்தது.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையம் சென்றது, பிரயாக்ராஜ் கும்பமேளா, விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் கிரிக்கெட் அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது, மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர்ந்தது, பார்வை மாற்றுத்திறன் பெண்களுக்கான டி20 உலகக் கோப்பையை இந்திய வீராங்கனைகள் வாகை சூடியது என்பதுபோன்ற சாதனைப் பட்டியல்கள் தொடர்ந்து கொண்டே போகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் 2024-2025-ல் 9.69 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பெற்று நாட்டிலேயே முதல் இடத்தைப் பெற்றது மட்டுமல்லாமல், இந்த நிதி ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பெற்ற பெரும் சாதனையை தன் மகுடமாக சூடியுள்ளது.

இந்த ஆண்டில்தான் தமிழக அரசின் சார்பில் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ என்ற மருத்துவ முகாம்கள் திட்டம், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் முதல்-அமைச்சரின் ‘தாயுமானவர்’, முன்னாள் ராணுவ வீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’, அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களிலும் அரசு பள்ளிக்கூடங்களைப் போல வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

இன்று புதிதாகப் பிறந்துள்ள 2026-ம் ஆண்டு பல எதிர்பார்ப்புகளோடு நல்வரவாக தொடங்கியுள்ளது. ஏப்ரல்-மே மாதங்களில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடக்க இருக்கிறது. தி.மு.க.வால் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது 505 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இதில் பெரும்பான்மையான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகளையும் தமிழக அரசு அடுத்த மாதத்துக்குள் அறிவித்துவிடும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.

வரப்போகும் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., விஜய்யின் த.வெ.க., சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்ற மக்களின் கேள்விக்கு மே மாதத்தில் விடை கிடைத்துவிடும் என்பதால், தமிழ்நாட்டில் 2026 ஒரு முக்கியமான அறிவிப்பை சொல்லும் ஆண்டாக திகழப்போகிறது.

Tags:    

மேலும் செய்திகள்