திருத்தணியில் தாக்கப்பட்ட வடமாநில வாலிபர் இறந்துவிட்டாரா? - தமிழக அரசு விளக்கம்
வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்பட தகவல் பரவி வருகிறது;
சென்னை,
திருத்தணி ரெயில் நிலையம் அருகே ஒடிசாவை சேர்ந்த வாலிபர் மீது கஞ்சா போதையில் 4 பேர் கொடூரமாக தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி, காண்போரை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 சிறுவர்களையும் போலீசார் பிடித்தனர். ஒருவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். மீதம் உள்ள 3 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே தாக்குதலுக்கு உள்ளான ஒடிசா வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்கிடையே அந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்பட தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
27.12.2025 அன்று திருத்தணி ரெயில்வே குடியிருப்பு அருகே சில நபர்களால் தாக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்ததாக பரவும் தகவல் தவறானது. பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்ற பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி சென்றுள்ளார். தவறான செய்தியை பரப்புவது சட்டப்படி குற்றமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.