சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா;
அவினாசி
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இக்கோவிலில் நேற்று சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் 90- வது குருபூஜை நிகழ்ச்சி நடந்தது. இதில் கரூர் குமாரசாமி தேசிகர் தலைமையில் சுந்தரமூர்த்தி நாயனார் அருளி செய்த 7-ம்திருமுறை தெய்வ சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராணம் வரலாறு பற்றி முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நேற்று காலை 5 மணி அளவில் செல்வ விநாயகர், பாதிரி மரத்தம்மன், சிவகாமி அம்பாள், சுப்பிரமணியர், 63 நாயன்மார்கள், பஞ்சலிங்கம், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. 8 மணி அளவில் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான்பெருமாள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணியளவில் யானை வாகனத்தில் சுந்தரரும், குதிரை வாகனத்தில் சேரமான் பெருமானும் கோவில் வளாகத்தில் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அவினாசி, திருப்பூர், திருமுருகன் பூண்டி, சேவூர், கருவலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.