குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்

பழனி நகர் பகுதியில் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

Update: 2023-03-23 19:00 GMT

நகராட்சி கூட்டம்

பழனி நகராட்சியின் சிறப்பு கூட்டம் நேற்று அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையர் கமலா, பொறியாளர் வெற்றிசெல்வி, நகர்நல அலுவலர் மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் விவரம் வருமாறு:-

இந்திரா (தி.மு.க.): நகராட்சி பகுதியில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதை சரிசெய்ய வேண்டும்.

பொறியாளர்: விரைவில் பணிகள் தொடங்க உள்ளதால் அவை சரி செய்யப்படும்.

நாய்கள் தொல்லை

சாகுல்அமீது (தி.மு.க.) : நகராட்சி பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி பகுதிகளில் சமூக விரோதிகள் ஆக்கிரமித்து மது அருந்தி வருகின்றனர். அதைதடுக்க போதிய காவலர்களை நியமிக்க வேண்டும். இதேபோல் பழனி நகரில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

தலைவர்: குடிநீர் தொட்டி பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும்.

நகர்நல அலுவலர்: நாய்கள் தொல்லையை தடுக்க வீடுகளில் உள்ள நாய்களுக்கு தடுப்பூசி முகாம் போடப்பட்டு உள்ளது. ஆனால் தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய போதிய நிதி இல்லை. அதாவது ஒரு நாய்க்கு கருத்தடைக்கான செலவு ரூ.700 என்ற அடிப்படையில் உள்ளது. மற்ற நகராட்சிகளில் ரூ.1000 வழங்கப்படுகிறது. எனவே அதற்கான தொகையை அதிகப்படுத்தினால் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

கண்காணிப்பு கேமராக்கள்

ஜென்னத்துல்பிர்தவுஸ் (அ.தி.மு.க.) : 25-வது வார்டு பகுதியில் மின்மோட்டார்கள் பழுதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பொறியாளர்: வரும் நாட்களில் பழுதான மோட்டாரை அகற்றும்போதே புதிய மோட்டார் பொருத்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பஜ்லூர் ரகுமான் (தி.மு.க.) : நகராட்சி பகுதியில் பெரும்பாலான கழிப்பறைகள் சேதமடைந்துள்ளது. எப்போது அவை சரிசெய்யப்படும்?

நகர்நல அலுவலர்: நகர் பகுதியில் 12 கழிப்பறைகள் இடித்து புதிதாக கட்டப்பட உள்ளன. இதற்கான நிதி வந்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

இதற்கிடையே பழனி நகர் பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று சில கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர்.

இதைத்தொடர்ந்து பழனி நகராட்சி பகுதியில் இடித்து கட்டப்பட உள்ள பஸ்நிலைய கடைக்காரர்களுக்கு தற்காலிக கடைகள் அமைப்பது உள்பட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்