வடலூர் சத்தியஞான சபையில் 7 திரைகளை விலக்கி தைப்பூச ஜோதி தரிசனம்

வடலூரில் தைப்பூச திருநாளை முன்னிட்டு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-02-05 21:15 GMT

வடலூர்,

இறைவன் ஜோதி வடிவானவன் என்பதை உலகுக்கு உணர்த்திய ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார். மனிதனின் அகத்தில் உள்ள காமம், கோபம், லோகம், மோகம், மதம், மாச்சரியம் உள்ளிட்ட 7 வகை தீய குணங்களும் விலகினால் அருட்பெருஞ்ஜோதியான ஆண்டவனை காணலாம் என்பதே வள்ளலாரின் உபதேசம்.

இதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் சத்தியஞான சபையின் மையப்பகுதியில் நிலைக் கண்ணாடிக்குள் இருக்கும் ஜோதியை மறைத்து 7 வண்ணத் திரைகள் போடப்பட்டுள்ளன.

மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று 6 திரைகள் மட்டும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ஆனால் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று 7 திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

ஜோதி தரிசனம்

அந்த வகையில் 152-வது ஆண்டு தைப்பூச விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று ஜோதி தரிசனம் நடைபெற்றது. முதல் ஜோதி தரிசனம் காலை 6 மணிக்கு காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் காலை 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு என்று மொத்தம் 6 காலம் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

அங்குள்ள தரும சாலை மேடையில் மாவட்ட அறநிலையத்துறையின் அதிகாரிகள் முன்னிலையில் சன்மார்க்க அறிஞர்கள் உரையாற்றினார்கள்.

அதேபோன்று, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் தரிசனம் செய்தனர்.

கருத்தரங்கம்

விழாவையொட்டி காலை 11 மணிக்கு தரும சாலை பிரசங்க மேடையில் சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெற்றது. அதேபோல் சத்திய ஞான சபை மேடையில் வில்லிசை, வரலாற்று நாடகங்கள் மற்றும் நாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஜோதி தரிசனத்தை காண்பதற்காக வடலூரில் நேற்று 2 லட்சத்துக்கும் அதிகமான சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர். விழாவையொட்டி 900-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், 10 இடங்களில் உயர்கோபுர மேடை அமைத்தும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்