தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன முறைகேடு: வழக்கு பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும்

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் நடந்த முறைகேடு குறித்து கொடுக்கப்பட்ட புகார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிய மனுவுக்கு, பதில் அளிக்கும்படி ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், தொழில் துறை செயலாளர் ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-11-24 23:49 GMT

சென்னை,

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.செல்வக்குமார். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

முறைகேடு

தமிழ்நாடு தொழில் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் மூலம் ஆண்டுக்கு பல லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இந்த நிறுவனத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.

இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாளர், துணை மேலாளர் போன்ற பணியிடங்களுக்கு நிபந்தனைகளை மீறி தகுதியில்லாத பலரை அதிகாரிகள் சட்டவிரோதமாக நியமித்துள்ளனர்.

நடவடிக்கை இல்லை

பதவி உயர்வு, கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களுக்கான டெண்டரிலும் ஏராளமான விதிமீறல்கள் நடந்துள்ளன. குறிப்பாக அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ் மற்ற தனியார் சிமெண்ட் நிறுவனங்களிடம் இருந்து சிமெண்ட் மூடைகளைப் பெற்று சலுகை விலையில் வழங்கியுள்ளனர். ஒப்பந்தங்கள் தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் அளிக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மதுபானம்

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஜோதி ஆஜராகி, 'ஊழல் சம்பவங்களில் அரசியல்வாதிகளை விட அதிகாரிகள்தான் இப்போது அதிகமாக ஈடுபடுகின்றனர். நட்சத்திர விடுதி ஒன்றில் மதுபானம் அருந்திவிட்டு அந்த பில் தொகையை தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து வசூலித்துள்ளனர். தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் கடந்த ஆட்சியில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன' என்று வாதிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், தொழில் துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற டிசம்பர் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்