தியேட்டர்களில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்-தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

தியேட்டர்களில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.;

Update:2022-08-11 03:38 IST

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தலைவர் சுப்பிரமணியம், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தியேட்டர்களின் உரிமங்களை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களின் பராமரிப்பு கட்டணம் ரூ.2-ல் இருந்து ரூ.5-ஆகவும், குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டர்களுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.10 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேட்டி

தொடர்ந்து சங்க தலைவர் சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சினிமா தியேட்டர்களில் டிப்ளமோ படித்தவர்களை ஆபரேட்டர்களாக பணியமர்த்த அரசு அனுமதிக்க வேண்டும். முன்னணி நடிகர் அமீர்கான் தனது படங்கள் வெளியான 6 மாதங்களுக்கு பிறகு ஓ.டி.டி.யில் வெளியிட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

இதேபோல் தமிழகத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தியேட்டர்களில் வெளியான 8 வாரங்களுக்கு பிறகே ஓ.டி.டி.யில் வெளியிட வேண்டும். இதற்காக நடிகர்கள் தங்கள் படம் ஒப்பந்தம் போடும் போதே ஓ.டி. தளத்தில் எப்போது வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.

டிக்கெட் கட்டணம்

பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் ஒரு டிக்கெட் ரூ.500 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது. தமிழகத்தில் தான் டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ளது. எனவே டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளோம்.

விக்ரம் படம் ஓ.டி.டி. தளத்தில் திரையிட்டு இருந்தால் பெரிய அளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்