முன்னோர்களுக்கு தர்ப்பணம், மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது.;

Update:2023-08-17 01:45 IST

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆண்டுதோறும் ஆடி, தை, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது. இறந்த தங்களின் முன்னோர்களுக்கு அந்நாளில் தர்ப்பண வழிபாடுகள் செய்வது இந்துக்களின் வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு ஆடி மாதத்தின் அமாவாசை நாளான நேற்று திண்டுக்கல் கோபால சமுத்திர கரையில் தர்ப்பண வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை 6 மணியளவில் இருந்து ஏராளமானோர் அங்கு தர்ப்பணம் கொடுக்க வந்தனர்.

பின்னர் இவர்கள் அனைவரும் வரிசையாக அமர்ந்து வாழை இலையில் தேங்காய், பழம், பூ, பச்சரிசி, காய்கறிகளை எடுத்து வைத்தனர். புரோகிதர்கள் வேத மந்திரங்கள் கூற தங்களது முன்னோர்களை நினைத்து எள், தண்ணீர் விட்டு கற்பூரம் ஏற்றி தர்ப்பணம் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து தர்ப்பணம் கொடுத்த பச்சரிசியில் சிறிதளவு வீட்டுக்கு எடுத்து சென்று அதை சமையலில் சேர்த்து விரதம் விட்டனர். மேலும் சிலர் பசுவுக்கு அகத்திக்கீரை கொடுத்தனர். ஏழைகளுக்கு அன்னதானம் செய்தனர்.

மோட்ச தீபம்

இதேபோல் பழனி சண்முகநதி கரையில் காலையிலேயே தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் குவிந்தனர். புரோகிர்கள் முன்னிலையில் தங்கள் முன்னோர் ஆசி கிடைக்க வேண்டி தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

பின்னர் அவர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தர்ப்பணம் செலுத்தினர். மேலும் கோவில் முன்பு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்