டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் நவம்பர் 15 முதல் அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-10-11 14:57 GMT

சென்னை,

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நவம்பர் 15 முதல் அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பின் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்திருந்தது. காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகலமலை, டாப் சிலிப் போன்ற மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது.

இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது குறித்து விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறு அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது குறித்து வழக்கறிஞர்கள் ஆலோசனைகள் வழங்கினர். அதற்கு பதிலளித்து டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், முதலில் ஒரு மாவட்டத்தில் இத்திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்தி, அதன் முடிவுகளைப் பார்த்து, பின்னர் மற்ற மாவட்டங்களில் அமல்படுத்துவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நவம்பர் 15 முதல் இரு மாதங்களுக்கு அமல்படுத்தி, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்