திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

Update: 2023-06-03 19:00 GMT

திருச்செங்கோடு:

திருச்செங்கோட்டில் நடந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

அர்த்தநாரீஸ்வரர் கோவில்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் திகழ்கிறது. மலையில் உள்ள இந்த கோவிலில் சிவபெருமான் ஆண் பாதியாகவும், பெண் பாதியாகவும் அர்த்தநாரீஸ்வரராக வீற்றிருக்கிறார். இங்கு தினமும் ஆகமவிதிகளின் படி சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டும் தேர்த்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்டவை நடந்தன.

தேரோட்டம்

இதனை தொடர்ந்து 10-ம் நாள் திருவிழாவான நேற்று சிகர நிகழ்ச்சியாக அர்த்தநாரீஸ்வரர் தேருக்கு எழுந்தருளி வீதி உலா வரும் தேரோட்டம் நடந்தது. அதன்படி தமிழகத்தின் 4-வது பெரிய தேரான அர்த்தநாரீஸ்வரர் தேர் வடம் பிடிக்கப்பட்டது. திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ் பாபு, அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணி காந்தன் உள்ளிட்டோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதையடுத்து நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். அப்போது மக்கள் வெள்ளத்தில் அசைந்தாடியவாறு தேர் நகரின் முக்கிய வீதிகளில் சென்றது.

இந்த தேரோட்டம் 3 நாட்கள் நடைபெறுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-ம் நாள் தேர் வடம் பிடிக்கப்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் நிறுத்தப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) தேர் நிலை சேர்கிறது. பின்னர் பரிவார தெய்வங்களுடன் அர்த்தநாரீஸ்வரர் மலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. திருச்செங்கோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ரூரல் இன்ஸ்பெக்டர் பாரதி மோகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காவடியாட்டம்

திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் மற்றும் குழுவினர் தீயணைப்பு வாகனத்தோடு தேருக்கு பின்னால் பாதுகாப்பாக அணிவகுத்து சென்றனர். முன்னதாக காவடியாட்டம், சிலம்பாட்டம், சிவன் பார்வதி ஆட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்