இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி தென்காசி வாலிபர் நடைபயணம்

தூத்துக்குடியில் இருந்து லடாக் வரை இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி தென்காசி வாலிபர் நடைபயணம் சென்றார்.

Update: 2022-12-15 19:30 GMT

ஓசூர்;-

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா அவனிகுனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன். 20 வயதான இவர், ஐ.டி.ஐ. படித்துள்ளார். இவர், இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து லடாக் வரை நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். இவர், தான் படித்த தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து கடந்த மாதம் 18-ந்் தேதி தனது நடைபயணத்தை தொடங்கினார். நேற்று முன்தினம் இரவு ஓசூர் வந்த அவருக்கு அவருடைய நண்பர்கள் வரவேற்பு அளித்து தங்களுடன் இரவு தங்க வைத்தனர். தொடர்ந்து, நேற்று ஓசூர் பஸ் நிலையத்தில் இருந்து நடைபயணத்தை தொடர்ந்த கலைவாணன், லடாக் நோக்கி புறப்பட்டு சென்றார். அவருக்கு அவரது நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நடைபயணம் செல்லும் கலைவாணன் கூறுகையில், தினமும் 30 முதல் 50 கிலோ மீட்டர் நடைபயணம் செல்வதாகவும், நண்பர்கள் உதவியால்தான் லடாக் வரை செல்வதாகவும் கூறினார். ஓசூரில் கலைவாணனுடன், ஈரோட்டை சேர்ந்த மாணவர் முகிலன் என்பவர் நடைப்பயணத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே ஈரோட்டில் இருந்து நடை பயணமாக லடாக் வரை சென்ற முகிலன், லடாக் பகுதியில் கடும் பனிப்பொழிவு இருந்ததால் தனது பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு திரும்பி விட்டார். தற்போது ஓசூரில் இருந்து கலைவாணன் லடாக் நோக்கி நடைபயணம் செல்வதை இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்த அவர், அவருக்கு உதவியாக தானும் செல்வதாக முகிலன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்