பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்
பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்துடன் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ெதாடங்கியது. 4-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.;
தைப்பூச திருவிழா
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா, உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், மயூரையாகம் நடைபெற்று, கொடிப்படம் வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கோவில் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வனைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், கொடிப்படத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதையடுத்து காலை 9.30 மணிக்கு காலசந்தி பூஜையில் காப்புக்கட்டுதல் நடந்தது. பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் கொடிகட்டு மண்டபத்திற்கு எழுந்தருளினார். மேலும் கொடிப்படமும் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது.
கொடியேற்றம்
இதைத்தொடர்ந்து விநாயகர் பூஜை, கொடிபூஜை, வாத்திய பூஜை, கொடிப்படத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டு 10.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
அப்போது அங்கு திரளாக இருந்த பக்தர்கள் 'முருகனுக்கு அரோகரா', 'கந்தனுக்கு அரோகரா' என சரணகோஷம் எழுப்பினர். பின்னர் ஓதுவார்கள், கோவில் குருக்கள்கள் பண்ணிசை பாடி கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டினர். தொடர்ந்து சப்பரத்தில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பகல் 12 மணிக்கு மேல் உச்சிக்கால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் உள்ள விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவார பாலகர்களுக்கு காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணியம் மற்றும் குருக்கள்கள் செய்தனர்.
தைப்பூச திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வக் குமார், நவீன், நரேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சத்யா, ஓட்டல் கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிகரமுத்து, சரவணபொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
திருக்கல்யாணம், தேரோட்டம்
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் ரதவீதிகளில் உலா வருகிறார். இதேபோல் இரவு 7.30 மணிக்கு புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளியானை, பெரியதங்கமயில் மற்றும் தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடு நடைபெறுகிறது.
விழாவில் 6-ம்-நாளான வருகிற 3-ந்தேதி இரவு 7 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு வெள்ளிரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி, தேவியர்களுடன் ரதவீதிகளில் உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அடுத்த நாள் (சனிக்கிழமை) தைப்பூசத்தன்று அதிகாலை 5 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை சண்முகநதியில் எழுந்தருளி தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் காலை 11 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் 10-ம்நாளான 7-ந் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.