உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமை தாங்கினார்.
இதையடுத்து குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போது கல்வி பெறுவது குழந்தைகள் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒரு போதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் என்றும், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் என்றும், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், தமிழகத்தை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு பாடுபடுவேன் என்றும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணம்மாள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ருக்மணி தேவி, சித்ரா உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து உடுமலையில் உள்ள பேக்கரி மற்றும் டீக்கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தக் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு போலீசாருக்கு இன்ஸ்பெக்டர் கவிதா அறிவுரை வழங்கினார்.