சேவல் சண்டையில் ஈடுபட்ட ஆசாமிகள் தப்பி ஓட்டம்
கிருஷ்ணராயபுரத்தில் சேவல் சண்டையில் ஈடுபட்ட ஆசாமிகள் தப்பி ஓடினர். இவர்களிடம் இருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வீரியப்பட்டி முருகன் கோவில் அருகே மற்றும் பிச்சம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே பணம் வைத்து சிலர் சேவல் சண்டையில் ஈடுபடுவதாக மாயனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றனர். அப்போது சேவல் சண்டையில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் நாலாபுறமும் சிதறி ஓடினர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் வயல்வெளி வழியாக தப்பி சென்றனர். இதையடுத்து, அவர்கள் விட்டு சென்ற 8 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.