வாலிபர் பாலத்தில் இருந்து குதித்ததால் கால் முறிந்தது
வாலிபர் பாலத்தில் இருந்து குதித்ததால் கால் முறிந்தது;
கோவை
கோவை ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்தபோது கால் முறிந்தது.
ரவுடி கொலை வழக்கு
கோவை கோர்ட்டு அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
2 ரவுடிகளிடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கோகுல் கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தனிப்படை போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்திருந்தனர்.
இந்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த பார்த்தசாரதி (வயது 26) என்ற வாலிபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரை போலீசார் தேடி வந்தனர்.
ஏற்கனவே கோத்தகிரியில் சில குற்றவாளிகளை போலீசார் தேடிச் சென்றபோது போலீசாரிடம் இருந்து பார்த்தசாரதி தப்பிச் சென்றார். இதனால் அவரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
பாலத்தில் இருந்து குதித்தார்
இந்த நிலையில் பார்த்தசாரதி நேற்று ரத்தினபுரி பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அவர் தங்கியிருந்த இடத்துக்கு சென்று சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து பார்த்தசாரதி தப்பி ஓடினார். ரத்தினபுரி 7-வது வீதியில் உள்ள ஜீவானந்தம் பாலத்தில் சென்றபோது, திடீரென பாலத்தில் இருந்து கீழே குதித்தார். அப்போது அவரது காலில் முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். அதனால் அவரால் அங்கிருந்து தப்பி ஓட முடியவில்லை. அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டதால் உடனடியாக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பார்த்தசாரதியுடன் சேர்த்து கோகுல் கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைதாகி உள்ளனர்.