நடு ரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது
திருக்கோவிலூர் அருகே பரபரப்பு: நடு ரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது டிரைவர் உள்பட 2 பேர் உயிர் தப்பினர்;
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள எடையூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவருக்கு சொந்தமான காரை பழுது பார்ப்பதற்காக அதே கிராமத்தை சேர்ந்த சிவராஜ்(வயது 28) என்பவர் திருக்கோவிலூரில் உள்ள தனியார் பணிமனைக்கு ஓட்டி சென்றார். அங்கு பழுதை சரிசெய்த பின்னர் சிவராஜ் மீண்டும் எடையூர் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். உடன் அவரது நண்பர் பிரபு(32) என்பவரும் காரில் வந்தார். திருக்கோவிலூர்-சங்கராபுரம் சாலையில் தொட்டி-கரடி இடையே உள்ள அய்யனார் கோவில் அருகில் வந்த போது திடீரென காரின் முன் பக்கம் என்ஜீனில் இருந்து கரும்புகை வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவராஜ் காரை சாலையோரமாக நிறுத்தினார். ஆனால் அதற்குள் கார் தீ பிடித்து எரிய தொடங்கியது. உடனே சிவராஜூம், பிரபுவும் காருக்குள் இருந்து அவசர அவசரமாக இறங்கினர். அடுத்த சில நிமிடங்களில் கார் மள மள வென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய தீயணைப்பு அலுவலர் ராமலிங்கம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படு்த்தியது.